July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மூன்று மாதங்களுக்கு தேவையான சீனி கைவசம் உள்ளது’

கொவிட் அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியிலும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், நாட்டில் சீனி மற்றும் அரிசி தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படவில்லை.எனினும் வியாபாரிகள் ஒரு சிலரின் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் தற்போதும் நாட்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மெட்ரிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளது.மாதம் 45 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி மக்களின் பாவனைக்கு தேவைப்படுகின்றது.ஆகவே அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான அளவு சீனி எம்மிடம் உள்ளது.

அதேபோல்அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒரு கிலோ சீனி 120/130 ரூபாய் என்ற நிர்ணய விலையில் வழங்கப்படும் என்றார்.

இலங்கைக்கான சீனியை குறைந்த விலையில் எவரேனும் ஒரு வியாபாரி இறக்குமதி செய்வாரெனில் அவரிடம் இருந்தே அரசாங்கம் சீனியை பெற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளது.இதில் எந்த பேதங்களும் பாகுபாடும் பார்க்கப்படாது.எதிர்க்கட்சியினரும் இந்த விடயத்தில் எம்முடன் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும்.மேலும் குறைந்த விலையில் சீனி இறக்குமதி செய்துவிட்டு 130 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்குவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால் தேசிய உற்பத்தியாளர்,டொலருக்கான பெறுமதி ஆகிய இரண்டு காரணங்களுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேபோல் சீனி விலையை 230/240 ரூபா வரையில் உயர்த்தும் வரையில் அரசாங்கம் வேடிக்கை பார்த்ததாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.இதுவும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டாகும்.

சீனி விலை அதிகரிக்கப்பட்ட வேளையில் அதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது.எனினும் எதுவும் சாத்தியப்படவில்லை.அதன் பின்னரே அதிரடி நடவடிக்கைகளை எடுக்க நேர்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.