
கோதுமை மாவின் விலையை அதிகரிக்காது இருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும்போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் எந்த வகையிலும் அனுமதிக்காது எனவும் அவர் கூறினார்.
கோதுமை மா இறக்குமதியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கோதுமை மாவுக்கு 2016 இல் அதிகபட்ச சில்லறை விலையாக ரூ .87 ஐ அரசு நிர்ணயித்துள்ளது.
கடந்த சில காலமாக மா விலையை உயர்த்துமாறு கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டினார்.
நாட்டில் கோதுமை மா விலை அதிகரிக்கப்படுமாயின், அனைத்து பேக்கரி பொருட்களும் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.