கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு அதற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு முடிவடைந்தது.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான காணிகள் தொடர்பாக சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
இது தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பிரதேச செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
எனினும், அந்த காணிகளை பயன்படுத்துவதற்கான இறுதி அனுமதி இதுவரை கிடைக்கவில்லை எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, இதுவரை 2,500 க்கும் அதிகமானவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே சடலங்களை அடக்கம் செய்வதற்கு அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் புதிய இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி கடந்த மாதம் கூறியிருந்தார்.
குறித்த பகுதியில் 2400 சடலங்களை அடக்கம் செய்ய முடியுமான விதத்தில் 3 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.