July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்யா, யுக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவர விசேட வேலைத்திட்டம்

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் ரஷ்யா மற்றும் யுக்ரைனுடன் சுற்றுலா மேம்பாட்டு முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அண்மைய காலங்களில் அதிகமாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முதல் 10 நாடுகளில் ரஷ்யாவும், யுக்ரைனும் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் தொற்று காலப்பகுதியில்  யுக்ரைன் மற்றும் கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் திட்டத்தை இலங்கை செயல்படுத்தியது. இதன்மூலம் கடந்த காலங்களில் 24,320 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களில் 250 சுற்றுலாப் பயணிகள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமின்றி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 150 பேர் முழுமையாக குணமடைந்த பின்னர் தங்கள் நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை இன்னும் 100 சுற்றுலா பயணிகள் நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நவம்பர் 4 ஆம் திகதி முதல் இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.