அனைத்து அமைச்சுக்களினதும் செலவீனங்களை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி அமைச்சுகளில் குறைக்கக் கூடிய செலவீனங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்க நடவடிக்கையெடுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவினால் அமைச்சு செயலாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலைமையால் நாட்டை அடிக்கடி முடக்கி வைத்திருப்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் செலவீனங்களை குறைக்க வேண்டும் என்று கடந்த அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் கூறியிருந்தார்.
இதன்படி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தற்போது ஆரம்பிக்க முடியாத வேலைத்திட்டங்கள், அமைச்சுகளின் புதிய கொள்வனவுகள், கட்டட நிர்மாணங்கள் மற்றும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அல்லது ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமைச்சுகளில் குறைக்கக் கூடிய செலவுகள் தொடர்பில் ஆராய்வதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.