January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பிய தமிழ் கட்சிகள்!

தமிழ் தேசியக் கட்சிகளின் நிலைப்பாட்டினை பிரதிபலிக்கும் கடிதமொன்று ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வு இம்மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே குறித்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

இதனூடாக ஊடாக 46/1 பிரேரணையின் பின்னரான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான தமது நிலைப்பாட்டை ஐநா மனித உரிமைகள் ஆணையாளரிடம் விளக்கியுள்ளதாக சுரேந்திரன் குருசுவாமி கூறியுள்ளார்.

காணி அபகரிப்பு, தொல்லியல் நடவடிக்கைகள், நினைவேந்தல்களுக்கான தடைகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையிலான கைதுகள், தடுத்து வைத்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவ அதிகாரிகளை நியமித்தல் உள்ளிட்ட விடயங்கள் இந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.