November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும்’

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கையின் பொலிஸ் சேவை 155 ஆவது வருடத்தை பூர்த்தி செய்ததை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்து வ்ளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்;

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வீதியில் சேவையில் ஈடுப்படும் பொலிஸாரின் மனநிலையை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதற்காக பொது மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட முடியாது.இரு தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது.ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளில் பொலிஸார் திறம்பட செயற்படவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இரண்டு வருட காலப்பகுதியில் பொலிஸ் திணைக்களம் சிறந்த முறையில் செயற்பட்டு பல சாட்சியங்களை திரட்டியுள்ளது.தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 32 பேருக்கு எதிராக 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்,விசாரணை நடவடிக்கைகளுக்காக மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

இவையனைத்தும் பொலிஸாரின் துரித செயற்பாடுகளினால் தான் சாத்தியமானது.ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் வழங்கப்படும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிச்சயம் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.