January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களை அடக்கி ஆளவே அவசரகால சட்டம் பிரகடனம்; விக்னேஸ்வரன் கண்டனம்

தமக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்துகொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகால சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உபயோகித்துள்ளார்.இது சர்வாதிகாரத்துக்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“2243/1 அதிவிசேட வர்த்தமானி மூலம் கொரோனாவைக் காரணம் காட்டி அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

உண்மையில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம் அனர்த்த முகாமைத்துவச் சட்டம்.அதன் கீழ் ஒரு செயலணியை நிறுவி மருத்துவ ஆலோசனைகளுக்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதிலிருந்து ஜனாதிபதி ஆரம்பத்திலேயே தவறிவிட்டார்.பல குற்றங்களை அவர் புரிந்துள்ளார்.

இவ்வாறான அனர்த்த முகாமைத்துவ செயலணியை இதுவரையில் நியமிக்காமை, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை துறைசார் நிபுணர்களை வைத்து இதுவரையில் கட்டுப்படுத்தாமை, இராணுவத்தை கொரோனாவைக் கட்டுப்படுத்த நியமித்தமை, கொரோனாவைக் காரணம் காட்டி அவசரகால நிலையை ஏற்படுத்தி சர்வாதிகாரத்துக்கு வித்திட்டமை என பல குற்றங்களை ஜனாதிபதி புரிந்துள்ளார்.

ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் உள்ளது.அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைத்து அவர்கள் எங்கும் வியாபித்திருக்கின்றார்கள்.மூன்றாவதாக அவசரகால சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளார்.

தமக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்துகொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகால சட்டத்தை ஜனாதிபதி உபயோகித்துள்ளார்.இது சர்வாதிகாரத்துக்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது.இராணுவம் என்றால் என்ன என்பதை இனி சிங்கள மக்கள் அறிந்து கொள்வார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.