November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது பலவீனப்படுத்தி விடும் என்கிறார் மாவை

தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்தி விடுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அவருடைய இல்லத்தில் நடந்த ஊடக சந்திப்பிலே,தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தமிழரசுக் கட்சி தனித்தும் ஏனைய கட்சிகள் தனித்து இயங்கப் போவதாகவும் வெளியான செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்

இது ஒரு பொறுப்பற்ற ரீதியான பிரசாரம்.நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்திவிடும். எங்களுடைய இலக்கை அடைய முடியாது கொரோனா நேரத்தில் இவ்வாறான கருத்துகளுக்கு இடமளிக்கக் கூடாது

மனித உரிமைப் பேரவையில் 46/1என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து விட்டது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பச்லெற் அம்மையார் இலங்கை தொடர்பாக ஒரு முக்கியமான உரையாற்றுவாரென எதிர்பார்க்கிறோம்.

சர்வதேச நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசாங்கம் ஒரு பேச்சுக்காக தாங்கள் மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென கூறுவதை நாங்கள் நம்பி ஏமாந்துவிடக் கூடாது.

மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்,நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ,கொடுத்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பது தொடர்பில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.

அதையொட்டி தமிழரசுக் கட்சி,தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளும் ஒன்றுபட்டு மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பின்னர் நடைபெறுகின்ற இலங்கை அரசாங்கத்தின் விரோதமாக இடம்பெறுகின்ற விடயங்கள் தொடர்பாக எங்கள் மதிப்பீட்டை நாங்கள் அனுப்ப வேண்டும்.

இது தொடர்பாக இரண்டு விதமான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றது.ஒன்று கட்சிகள் மத்தியில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை அனுப்பி வைப்பது,இரண்டாவது பொது அமைப்புகளிடம் இருந்து கிடைக்கின்ற தகவல்கள்,தயாரிப்புகளை மையமாக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவர் கையெழுத்திட்டு ஒரு அறிக்கையை அனுப்பி வைப்பது என்பதாகும்.

அதைவிட கட்சிகளின் சார்பிலே சில அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.அதனை நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு அனுப்ப வேண்டும்.தனித்தனியாக கொடுக்கப் போகின்றோம் என்ற செய்திகளை தவிர்த்து தமிழ் தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் இதுவரை ஒன்றுபட்டு செயல்படுகின்ற தீர்மானங்கள் என்ற அக்கறையோடு செயற்படுகின்ற கட்சிகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.