தடுப்பூசி செலுத்தும் பணிக்காக தாம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் தகவல்களை கோரவில்லை என சுகாதார மேம்பாட்டுபணியகம் தெரிவித்துள்ளது.
சிறுவர்களின் தகவல்களை கோரும் வகையில் போலியான கூகுள் படிவம் ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக தெவித்துள்ள சுகாதார மேம்பாட்டுபணியகம், இதில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சினாலோ அல்லது தொற்றுநோயியல் பிரிவினாலோ இவ்வாறு எந்த தகவலும் கோரப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ கூறினார்.
இந்த மோசடி குறித்து பொலிஸ் சைபர் குற்றத் தடுப்பு பிரிவுக்கும் இலங்கை கணினி அவசர தயார் நிலை ஒருங்கிணைப்பு மையத்திற்கும் (CERT) முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
“இது ஒரு போலி தகவல் சேகரிப்பாகும். இந்த சந்தேகத்திற்கிடமான தரவு சேகரிப்பு தளங்களில் எந்த தகவலையும் கொடுக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களை எச்சரிக்கிறோம்” என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ கூறியுள்ளார்.