இலங்கையின் பலாங்கொடையிலுள்ள பஹந்துடாவ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மஹரகம மற்றும் எல்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்த 34 வயதுடைய ஆணும், 24 வயதுடைய பெண்ணும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்றைய தினம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆணுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நீர்வீழ்ச்சிப் பகுதியில் இளம் ஜோடியொன்று அநாகரிகமாக நடந்துகொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணணி குற்றவியல் பிரிவு, விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை கைது செய்தது.
சந்தேக நபர்கள் இதுபோன்று நாட்டில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளதுடன், ஆபாச வலைத்தளங்களுக்காக இது போன்ற வீடியோக்களை உருவாக்கி அதனூடாக இவர்கள் பணம் சம்பாதித்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.