இலங்கைக்கு சட்டவிரோதமாக மருந்துப்பொருட்களை கொண்டுவந்த இரண்டு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருவரின் கைகளில் இருந்த தனிப்பட்ட பைகளில் மருந்துப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சுகாதார அமைச்சு மற்றும் மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் சட்டப்பூர்வ அனுமதியின்றி குறித்த மருந்துகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர்களிடம் இருந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்ற 10 வகையான மருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.