January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.நா.பிரதிநிதி ஹனா சிங்கர்-வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்குமிடையில் கொழும்பில் சந்திப்பொன்று வியாழக்கிழமை(02) நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்;

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் தேவைகளின் பின்னணியில் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஐ.நா.குழு ஆகியவற்றுக்கு இடையேயான ஆக்கபூர்வமான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்காக ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் பீரிஸ் இந்த சந்திப்பில் நன்றிகளைத் தெரிவித்தார்.

கொவிட் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் அது தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு இதன்போது விளக்கினார்.

அமைதி, நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் நிலையான அபிவிருத்தி இலக்கு 16 உட்பட மனித உரிமைகள் மீதான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமான முன்னேற்றம் குறித்தும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் விளக்கினார்.

ஐ.நா.வுடனான அடுத்த 5 வருடங்களுக்கான ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னுரிமைகளை உள்ளடக்கிய நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்பு கட்டமைப்பு 2023 – 2027 ன் கீழ் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே தயாராகி வரும் செயன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அமைச்சருக்கு விளக்கியுள்ளார்.