July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக இலங்கை தெரிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர்ந்தும் நீடிப்பதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தகவலை பிரித்தானியா, இலங்கை அரசிடம் தெரியப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டம் 2000, சரத்து 7 இன் கீழ் நிறைவேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை மீளப்பெறுமாறு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆராய்ந்த பிரித்தானிய உள்துறை அமைச்சர், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என முடிவு எடுத்துள்ளார். அம்முடிவானது தமக்கு பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் பிரித்தானியா மற்றும் அனைத்து அரசாங்கங்களுடனான கூட்டுறவை இலங்கை அரசாங்கம் பாராட்டுவதுடன்,குடிமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலையும், உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தையும் விளைவிக்கும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தைத் தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் பிரித்தானியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை உறுதி பூண்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.