இலங்கையில் 18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் இன்று முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாட்டில் 18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட 3.7 மில்லியன் பேர் வரையிலானோர் தடுப்பூசியை பெறவேண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆடைத் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் பணியாற்றும் குறித்த வயதுப் பிரிவினரில் அதிகமானோருக்கு ஏற்கனவே தடுப்பூசி ஏற்பட்டுள்ளதாகவும், இதன்படி மாவட்ட மட்டத்தில் மற்றையவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதத்திற்குள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசிகளை செலுத்தும் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியுமாக இருக்கும் என்று நம்புவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அடுத்து வரும் சில வாரங்களில் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.