November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஒக்ஸிமீட்டருக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்

நாடித்துடிப்பை அளவிடும் ‘ஒக்ஸிமீட்டர்’ எனப்படும் ஒக்சிஜன் மானிக்கு இலங்கையில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்ஸிமீட்டர் ஒன்றின் விலையாக 3,000 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு விலைகளில் ஒக்ஸிமீட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக நாமம் தொடர்பில் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஒக்ஸிமீட்டருக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒக்ஸிமீட்டர்கள், தெர்மோமீட்டர்கள் மற்றும் ஒட்சிஜன் செறிவூட்டிகளின் தரம் குறித்து ஆராயவும் இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.