நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றமையால் முடியுமானால் இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அத்துடன், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ‘பேஸ் பீல்ட்’ (Face Field) முகக்கவசம் கட்டாயமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வீட்டுக்கு அருகாமையில் உள்ள தடுப்பூசி செலுத்தும் சிகிச்சை நிலையத்துக்கு சென்று அங்கு வழங்கப்படுகின்ற தடுப்பூசியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஒருசிலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு ஒவ்வொரு வகையான தடுப்பூசிகளை தேடிக்கொண்டு இருப்பதாகவும், வெளிநாட்டுக்கு செல்ல முன் யாருடைய உயிருக்காவது உத்தரவாதம் கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகவே, கொரோனாவிலிருந்து தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்ளவது அவரவரது பொறுப்பாகும் என குறிப்பிட்ட அவர், மற்றவர்கள் முடிவெடுக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி நடக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி, இந்தக் காலப்பகுதியில் அனைவரும் முடிந்தளவு வீடுகளில் இருப்பது தான் பாதுகாப்பானது என தெரிவித்த விசேட மருத்துவ நிபுணரான அவர், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தனிமைப்படுத்தலில் இருப்பது மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார்.
எனவே, கொரோனாவிலிருந்து பாதுகாப்பினை பெற சுகாதார அமைச்சின் ஐந்து முக்கியமான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.