November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“20ஆவது திருத்தம் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்”: சுதந்திர ஊடக இயக்கம்

இலங்கையின் அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் அதிகமான உட்பிரிவுகள் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும், ஊடகச் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தலாக அமைவதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுதந்திர ஊடக இயக்கம் அனுப்பி வைத்துள்ள பொதுமக்கள் மனுவில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20ஆம் திருத்தத்துக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு முன்னர் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள விடயங்கள் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

‘இலங்கையில் ஜனநாயகம், ஊடகச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கு பலமாக அச்சுறுத்தல் விடுப்பதாக, இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான சட்டமூலம் காணப்படுகின்றது.

ஊடகச் சுதந்திரம் மற்றும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி, அரசாங்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உட்பட அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்துக்கு இந்த சட்டத்தின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து சுதந்திர ஊடக இயக்கம் மிகவும் கவலையடைகின்றது.

20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கருத்துச் சுதந்திரத்துக்கும், ஊடகச் சுதந்திரத்துக்கும் கடுமையான சவாலாக அமையக் கூடிய பிரதான காரணியாக இனிமேலும் சுயாதீன நிறுவனங்களாக செயற்பட முடியாத சுயாதீன ஆணைக்குழுக்களின் விதியாகும்.

அரசியலமைப்பு சபை மூலம் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் மூலம் சுயாதீன அரச சேவை, பொலிஸ் சேவை, நீதிமன்றம், பொதுமக்கள் நிதி மேற்பார்வை, சுதந்திர மற்றும் நீதியான தேர்தல், தகவல் அறியும் உரிமை மற்றும் ஊழல் விசாரணைகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.

20ஆவது திருத்தம் மூலம் அரசியலமைப்பு சபை இரத்துச் செய்யப்பட்டு, சிவில் சமூக பிரதிநிதித்துவமற்ற, தீர்மானமெடுக்கும் அதிகாரமற்ற பாராளுமன்ற சபையொன்றுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படுவதன் ஊடாக ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதிலும் விலக்குவதிலும் ஜனாதிபதிக்கு தன்னிச்சையான அதிகாரமொன்று வழங்கப்படுவதானது சுயாதீன ஆணைக்குழுக்களை அவதானத்துக்குள்ளாக்குவதாகும்.’