
மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜீவன் தொண்டமான், முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று அவரை சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் செரிந்துவாழும் மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் மற்றும் மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக ஜீவன் தொண்டமான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் நீண்ட நாள் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைகழகம் அமைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளமையை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழ் நாட்டில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தமிழக சட்டபேரவையில் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வீடமைப்பு, கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தொடர்பான நலத்திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அம் மக்களுக்கு அறிவித்துள்ள இந் நலத்திட்டங்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் இச்சந்திப்பின் போது தெரிவித்ததோடு, இத் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் பரிந்துறைப்பதாகவும் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் தான் தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர், தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடன் பேணி வந்த உறவு மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பேணி வரும் நெருக்கமான உறவு தொடர்பிலும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மலையக மக்களுக்கு வந்தடையும் எனவும் நம்பிக்கை கொள்கின்றேன் என்று ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.