July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு கோரமின்மையால் ஒத்திவைப்பு!

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தலைவர் தெரிவுக்கான அமர்வு இன்று முற்பகல் நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டி.ரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்றைய அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஈபிடிபி உறுப்பினர்கள் இருவரும் என ஐவர் மட்டுமே அமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.

அதனால் அமர்வு சுமார் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அமர்வு ஆரம்பிக்கப்பட்டதும், போதுமான உறுப்பினர்கள் இல்லாமையினால் தலைவர் தெரிவுக்கான அமர்வு திகதி குறிப்பிடப்படாது ஒத்திவைக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை நகர சபை தலைவராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொவிட் தொற்றால் காலமானதை தொடர்ந்து, அந்த சபையின் தலைவர் பதவி வெற்றிடமாகியுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 4 உறுப்பினர்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 உறுப்பினர்களையும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.