யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் ஊரடங்கு சட்டத்தையும் மீறி வீதியோரத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டோர் பொலிஸாரைக் கண்டு, மரக்கறிகளை கைவிட்டு தப்பியோடிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிவன் அம்மன் வீதியில் காலை வேளையில் மரக்கறி வியாபாரிகள் அவ்விடத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதனால் அவ்விடத்தில் சனக் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றமை பொலிஸாரினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் ஏற்கனவே அவ்விடத்தில் மரக்கறி வியாபாரம் செய்ய வேண்டாம் என்று அறிவித்திருந்த நிலையிலேயே அந்த வியாபாரிகள் அவ்விடத்தில் மீண்டும் இன்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி இன்றைய தினம் அந்த இடத்திற்கு பொலிஸார் சென்ற போது, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் தமது வியாபார பொருட்களையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர். எனினும் பொலிசார் திரும்பி சென்ற பின்னர் தமது மரக்கறி பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனையோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.