இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பாக நாளைய தினம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
நாளை முற்பகல் ஜனாதிபதி தலைமையில் கொவிட் தடுப்புச் செயலணி கூடவுள்ளதுடன், இதன்போது இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படவுள்ளது.
கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு செப்டம்பர் 6 ஆம் திகதி வரையில் செயற்படுத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
எனினும் நாட்டில் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதால் இன்னும் இரண்டு வாரங்களுக்காவது ஊரடங்கை தொடர வேண்டும் என்று விசேட மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோன்று கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளேவும் மேலும் இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முடக்கி வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது நாட்டில் உள்ள தொற்று நிலைமை தொடர்பாக ஆராய்ந்து ஊரடங்கை தொடர்வதா? இல்லையா? என்று நாளைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.