கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடு நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்ட போதிலும் மக்களுக்கான அத்தியாவசிய மற்றும் மிக முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயன்படுத்தப்படும் 1200 மருந்துகளில் வெறுமனே 25 மருந்துகளுக்கு மாத்திரமே பற்றாக்குறை நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுவதாக எதிர்க்கட்சியினர் கூறும் நிலையில் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் பொதுவாக 800 தொடக்கம் 1200 வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய மருந்துகள் தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதில் தடைகள்விதிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடின்றி கைவசம் உள்ளன. எனினும் 25 க்கும் குறைந்த மருந்துகளில் தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த மருந்துகள் அத்தியாவசியமானவை அல்ல, இவற்றுக்கு மாற்றீடாக வேறு மருந்துகள் பயன்படுத்த முடியும் என்றும் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்ற போதிலும் அவ்வாறு எந்த விலையேற்றமும் அண்மைக்காலத்தில் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். .