தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அவசர நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எனவே இந்த நேரத்தில் அவசர நிலையை விதிப்பது பொருத்தமானதல்ல என கூறியுள்ள அவர், அவசரகாலச் சட்டத்தின் முடிவை மாற்றிக் கொள்ளும்படியும், 2005 ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மை சட்டத்தை அமுல்படுத்தும் படியும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதியிட்ட அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு எண் 2243/01 மூலம் கொவிட் -19 தொற்று நோய் சூழ்நிலையின் அடிப்படையில் ஜனாதிபதி அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
தொற்றுநோய் ஏற்படும் சூழலை விட பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சூழ்நிலையிலேயே அவசரகால நிலையை அமுல்படுத்துவது மிகவும் பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டம் குறிப்பாக தொற்று நோய் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட பேரழிவு சூழ்நிலைகளை கையாள வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமை வகிக்க முடியுமான ஏற்பாடுகள் உள்ள இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையை கொண்ட செயலணியை நிறுவுவதற்கான ஒரு வழிமுறை இருப்பதை நாங்கள் அதில் காண்பதோடு,அத்தகைய செயலணியை ஜனாதிபதி நிறுவ தவறிவிட்டார்.
மாறாக, தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு புறம்பாக ஒரு ‘ஜனாதிபதி செயலணி’உருவாக்கும் பாதை எடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலுக்கு 18 மாதங்களை எட்டும் நிலையில், தொற்று நோயைக் கையாள அரசாங்கம் தொடர்புடைய சட்டங்களை செயல்படுத்த தவறிவிட்டது என்பதையும் நாங்கள் கவனித்தோம்.இந்த நோக்கத்திற்காக பல நாடுகள் சிறப்பு சட்டங்களை கூட இயற்றி செயற்பட்டுள்ளன.
இந்த நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசர கால நிலை அறிவிக்கப்படவில்லை என்பதோடு, இந்த அறிக்கையை வெளியிடுவது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் தவறாக சித்தரித்து சர்வாதிகாரத்தை நோக்கி மேலும் நகரும் என்ற உள்நோக்கத்துடன் கூறப்பட்டுள்ளதா என்பதிலும் நாங்கள் கூடிய கவனம் கொண்டுள்ளோம்.
இது தவிர, அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளால் அரசாங்க வருவாயை இழந்துள்ளதோடு, வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வரும் நிலையில், இதன் விளைவாக எல்.பி.எரிவாயு மற்றும் பால் மா உட்பட பல அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.
அதேபோல, இதனால் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு (அல்லது வருவாய் இழப்பு) ஏற்படும் வண்ணம் சீனி போன்ற பிற அத்தியாவசிய பொருட்களின் விலை அரசாங்கத்தின் ஊழல் கொள்கைகளால் உயர்ந்துள்ளது.
இதனால், ஏதேனும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தடைபட்டால், இதற்கு அரசின் திறமையின்மை மற்றும் தவறான நிர்வாகமே காரணமாகுவதோடு, இது பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசர நிலை பிரகடனம் தேவைப்படும் ஒரு தொந்தரவு காரணமாக அல்ல என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவசர கால நிலையை உடனடியாக இரத்து செய்து தொற்று நோய்களைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளை கொண்ட அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை பெற்று, தொற்றுநோய் சூழ்நிலையை கையாளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையை நிறுவ இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின்படி செயல்படுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம்.