அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை நாளை (02) முதல் அமுல்படுத்தப்படும் என்று கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவித்துள்ளார்.
அரிசி மற்றும் சீனி உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகளின்படி, கடந்த 12 மாதங்களில் பல அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்வது உட்பட விலை உயர்வை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது இவ்வாறிருக்க, அரிசி மற்றும் சீனி என்பனவற்றுக்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலைகள் அரசாங்கத்தால் நாளை முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை முதல் குறித்த பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கொள்வனவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நுகர்வோர் அதிகார சபையால் கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சீல் வைக்கப்பட்ட உரிமம் பெற்ற மற்றும் உரிமம் பெறாத களஞ்சியசாலைகளில் உள்ள அனைத்து சீனியையும் அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.டி.எஸ்.பி நிவன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த தினங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் மூலம் கைப்பற்றப்பட்ட 30 ஆயிரம் மெட்றிக் டொன் சீனியை சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் ஊடாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
அதேபோல, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீனி களஞ்சியசாலைகளை கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.