July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை பொருளாதார, கொவிட் சவாலை வெற்றிகொள்ள சீனா ஒத்துழைக்கும்’: சீன சபாநாயகர்

இலங்கையில் பொருளாதார சவாலைப் போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும் என சீன பாராளுமன்ற சபாநாயகர் லீ சன்ஷ_, இலங்கையின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.

சீன பாராளுமன்றத்துக்கும் இலங்கை பாராளுமன்றத்துக்கும் இடையில் நேற்று நடைபெற்ற முதலாவது இராஜதந்திர மட்டத்திலான கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் மூன்றாவது பிரஜையும், சீன ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் எனக் கருதப்படும் சீனமக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷ_, தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் உபதலைவர் (பிரதி சபாநாயகர்) வூ வெஹ்வா, சீன நிதி அமைச்சர் லியூ குன் உட்பட அமைச்சர்கள் இணையவழி ஊடாக இணைந்துகொண்டுள்ளனர்.

இலங்கையின் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகர், பிரதி சபாநாயகர், பாராளுமன்ற சபை முதல்வர், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தற்பொழுது நிலவும் கொவிட் சூழ்நிலைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை சபாநாயகர் மகிந்த இதன்போது கோரியதுடன், இது தொடர்பில் சீன ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய முழு ஒத்துழைப்பை வழங்குவதாக சீன சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு சீனா 3 மில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியமைக்கு இதன்போது, நன்றி தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு சீன முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

இரு நாட்டு பாராளுமன்றங்களுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் அதிகரிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.