கொவிட் பரவுவதை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கூறினார்.
நாட்டில் தினசரி கொவிட் தொற்று எண்ணிக்கை 5,000 ஆக பதிவாகிவரும் நிலையில், சமூகத்தில் சுமார் 50,000 பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் கொவிட் பாதிப்பு தொடர்ந்தும் குறைவடையாத நிலை காணப்படுவதோடு, குடும்பங்களில் உள்ள அனைவரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அறிகுறிகள் இல்லாதவர்கள் சமூகத்தில் இருப்பது ஆபத்தானது என்றும் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கூறினார்.
தென்னாபிரிக்காவில் பரவி வரும் கடுமையான கொரோனா வைரஸ் வகை தற்போது இங்கிலாந்துக்கும் பரவியுள்ளது, அது இலங்கையிலும் பரவும் அபாயம் உள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொவிட் பரவலை கட்டுப்படுத்த நாட்டை தொடர்ந்து முடக்குவது சாத்தியமற்றது.எனவே மக்கள் எதிர்காலத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி வாழ பழகிக் கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.