தாலிபான்களால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படாலம் என்றும், இதனால் பாதுகாப்புப் பிரிவு இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தாலிபான்கள் என்றால் மாணவர்கள் என்றே அர்த்தப்படும். இதனால் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை மாணவர் இயக்கம் கைப்பற்றியுள்ளது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாணவர்களிடம் நிதி, ஆயுதங்கள், விமானம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் சென்றிருப்பது ஆபத்தானது என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களை மேற்குலக நாடுகள் தமது தேவைக்கு ஏற்றால் போன்று பயன்படுத்தலாம். இதனால் இலங்கைக்கும் ஆபத்துக்கள் இருக்கின்றன. இதனால் பாதுகாப்பு தரப்பு தாலிபான்கள் விடயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக ஞானசார தெரர் அந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.