நாட்டின் உணவு விநியோகத்தை அத்தியாவசிய சட்டமாக கையாள்வதாக கூறி அவசரகால நிலைமையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளமை நாட்டுக்கு ஆபத்தானது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஜனாதிபதியின் இந்தப் பிரகடனத்தை தாம் கண்டிப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் உணவு விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனத்தி ஜனாதிபதியினால் அவசரகால நிலைமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த பிரகடனம் நாட்டுக்கு ஆபத்தானது என்று கூறியுள்ளார்.
பொது சுகாதார நிலைமைகளுக்கான ஒரு சட்டம் இயற்றப்படவேண்டும் என தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருவதுடன், அதற்கான தனிநபர் சட்டமூலம் ஒன்றினையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், இப்போது ஜனாதிபதி புதிய வகையில் பிரகடனத்தை வெளியிட்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரகடனத்தின் ஊடாக தொடர்ந்து முற்று முழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடக்கும் என்பதுடன், ஜனாதிபதி தான் விரும்பும்சட்டங்களை மற்றும் விதிமுறைகளை வகுக்க முடியுமாக இருக்குமென சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு சட்டமியற்றும் அதிகாரமும் ஜனாதிபதி கைகளுக்கு சென்றடைவது ஆபத்தானது எனவும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.