July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் கந்தசுவாமி உற்சவம்; பாதுகாப்பு தீவிரம்

photo:NallurAlangaraKanthan-facebook

“யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த திருவிழாவுக்கு பொலிஸார் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுவர். கோயில் வளாகத்தில் பொலிஸார் நிறுத்தப்பட்டு கோயில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.”என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த தேர்த்திருவிழாவுக்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நல்லூர் முருகன் கோயிலின் வருடாந்த திருவிழா என்பது, யாழ்ப்பாணத்தில் விசேடமாக வடக்கு இந்து மக்களின் விசேட பெருவிழாவாகும்.

இந்த வருடாந்த மகோற்சவத்தை நடத்துவதற்காக முழுமையான ஒத்துழைப்பு இலங்கை பொலிஸாரால் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது நிலவும் நெருக்கடி சூழலில், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக இம்முறை நல்லூர் வருடாந்த திருவிழாவானது கோயிலுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கோயிலை அடிப்படையாக வைத்து தொண்டாற்றி வரும் பூசகர்கள் மற்றும் பூஜை வழிபாடுகளை நடத்துவதற்கு உதவுபவர்கள் மட்டுமே பங்குபற்றும் வகையில் நல்லூர் வருடாந்த உற்சவம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று,கோயில் வளாகத்தில் பொலிஸார் நிறுத்தப்பட்டு கோயில் வளாக பூமியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று நல்லூர் கோயிலுக்குள் உட்பிரவேசிக்கும் வீதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கோயிலுக்குள் உட்பிரவேசிக்க முடியாத வகையில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அல்லாத பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நல்லூர் கோயிலின் வருடாந்த திருவிழாவுக்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு ஒவ்வொரு முறையும் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இம்முறையும் நல்லூர் உற்சவத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.நல்லூர் உற்சவம் முடியும் வரை இந்த ஒத்தழைப்பு பெற்றுக் கொடுக்கப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.