May 13, 2025 17:20:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரத்த தானம் செய்ய முன்வருமாறு நன்கொடையாளர்களுக்கு அவசர அழைப்பு!

நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு இரத்த தானம் செய்வதில் ஆர்வம் காட்டுமாறு தேசிய இரத்த மாற்று நிலையம் நன்கொடையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டு நிலையில் நன்கொடையாளர்களிடமிருந்து இரத்தத்தை சேகரிப்பதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.

புற்று நோய், தலசீமியா, லியுகேமியா போன்ற நோயாளர்களுக்கும், திடீர் விபத்துகளினால் பலத்த காயமடைபவர்கள், அவசர சத்திர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் பிரசவத்திற்காக உள்ள தாய்மார்களுக்கும், தேவையான இரத்தத்தை வழங்குவதற்கு இரத்தம் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

அத்துடன், ஒவ்வொரு மாதமும் சுமார் ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 87 இரத்த சேகரிப்பு நிலையங்களில் ஒன்றிற்கு தொடர்பு கொண்டு இரத்த தானம் செய்வதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதன் மூலம் இரத்த தானம் செய்வதற்கு ஒன்றிணையுமாறு வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க கேட்டுக் கொண்டார்.

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டு சுகாதார முறைப்படி இரத்ததானம் செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.