July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனி மோசடி குறித்து நுகர்வோர் விவகார ஆணையம் விசேட நடவடிக்கை; 4 சீனி களஞ்சியசாலைகளுக்கு சீல்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீனி மோசடி தொடர்பில் ஆராய நுகர்வோர் விவகார ஆணையம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

நுகர்வோர் விவகார ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சுமார் 8 மாதங்களாக சந்தைக்கு வெளியிடப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11,070 மெட்ரிக் டொன் சீனி வத்தளையில் உள்ள மூன்று களஞ்சியசாலைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மாபிம பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் 37 மெட்ரிக் டன் சீனி சேமிக்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட வர்த்தக களஞ்சிய சாலைகள் நான்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதோடு, இவை நுகர்வோர் விவகார ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை என நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவிக்கின்றது.

நாட்டில் பெரும் தெகையான சீனி மறைத்து வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சந்தையில் சீனி இருப்பு தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்த நுகர்வோர் விவகார ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து சீனி விற்பனையாளர்களினதும் இருப்பு குறித்து தகவல் சேகரிக்கப்படும் என ஆணையம் தெரிவிக்கின்றது.

கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட இத்தகைய சோதனைகளின் போது இவ்வாறு பதுக்கப்பட்ட 12,255 மெட்ரிக் டொன் சீனி கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே சதோச விற்பனை நிலையங்களில் சிகப்பு சீனி கிலோ ஒன்று ரூ .130 க்கு விற்பனை செய்யப்படுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பால் மா தட்டுப்பாட்டை பயன்படுத்தி பொது மக்களுக்கு பால் மாவை விற்பனை செய்யும் மோசடியும் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பால் மா விற்கப்படும் இடங்களில் நுகர்வோர் விவகார ஆணையம் சோதனை நடத்தியது.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள கடையில் நியூசிலாந்தில் இருந்து ஐஸ்கிரீம் தயாரிக்க இறக்குமதி செய்யப்படும் பால் மாவை நுகர்வுக்கான பால் மாவாக பொதி செய்து விற்பனை செய்து வந்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.