November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் பொலிஸார் விசாரணை!

(Photo : wikimedia)

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் என்பவரின் வழக்கில் இலங்கையரான பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

5 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்ட விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரின் பணமோசடி குறித்த பல்வேறு தகவல்களை நடிகை ஜாக்குலின், அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து டெல்லி குற்றவியல் பொலிஸார் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் டி.டி.வி. தினகரன் உட்பட பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதும் சுகேஷ் சந்திரசேகர் தொடர்ந்தும் சிறையில் உள்ளார்.

இவர் மீதான இலஞ்ச வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், இதுபோன்ற பல மோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சேர்த்துள்ளதாக சுகேஷ் சந்திரசேகர் தொடர்பில் மத்திய அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இவர் மீதான விசாரணைகளை தீவிரப்படுத்திய மத்திய அமலாக்கத்துறை பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்திருந்தது.

இதனிடையே, 200 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் பொலிஸார் மற்றொரு வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பிலேயே நடிகை ஜாக்குலினிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையரான நடிகை ஜாக்குலின் பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.

தற்போது அக்‌ஷய் குமார் மற்றும் சல்மான் கானுடன் ‘கிக் 2’ மற்றும் ‘ராம் சேது’ மற்றும் ‘பச்சன் பாண்டே’ உட்பட பல படங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.