ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு செப்டம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (31) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.
கடந்த மார்ச் 09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாட்டின் சட்டம் மற்றும் ஷரிஆ சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து, கடந்த மார்ச் 16 ஆம் திகதி அசாத் சாலி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், கடந்த 18ஆம் திகதி விளக்கமறியல் உத்தரவின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.