அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு அமைச்சரவை வழங்கிய தீர்மானம் திருப்தியளிக்காததால் போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
அதிபர், ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவும், 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மூலம் படிப்படியாக தீர்வு வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சம்பள முரண்பாட்டுக்கு முழுமையான தீர்வையும் சுபோதனி அறிக்கைக்கு தீர்வாக வழங்கும்படியும் முன்வைத்த தமது கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகள் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
5000 முதல் 11,000 ஆயிரம் வரையான சம்பள அதிகரிப்பை படிப்படியாக வழங்குவதில் ஆசிரியர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என்று ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவைத் தீர்வை தாம் ஏற்றுக்கொள்வதில்லை என்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டத்தைத் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.