இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரெய்ன் ஜொரான்லி எஸ்கெடல், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டாண்மையைப் பாராட்டிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
ஒத்துழைப்பால் இலங்கை தொடர்ந்தும் பயனடையக்கூடிய நோர்வே அபிவிருத்தி ஒத்துழைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலான முதலீடு, நோர்வே தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மீன்வளத் துறையில் வழங்கப்படும் ஒத்துழைப்பு ஆகியன தொடர்பில் தூதுவர் எஸ்கெடல் விவரித்துள்ளார்.
கடல் வளங்களில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் கடல் மூலோபாயத்தின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது குறித்தும் இதன்போது தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்வள ஆராய்ச்சி மற்றும் பொருளாதாரம் மற்றும் இலங்கையின் பங்குச் சந்தையில் மதிப்புமிக்க நோர்வே ஓய்வூதிய நிதியத்தின் முதலீடு ஆகியவற்றில் நோர்வேயின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அமைச்சர் வரவேற்றதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.
இதேவேளை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சுற்றுலா, கல்வித் தொழில்நுட்பம், இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையிலான பெறுமதி சேர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.