January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ நடவடிக்கை

அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதுதொடர்பாக அமைச்சரவைக்கும் அறிவித்துள்ளார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதைக் கருத்திற்கொண்டு நிதி அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

கொவிட் தொற்று நோய் காரணமாக அரசாங்கத்தின் பல்வேறு வருமான வழிகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி வழங்கல், நிவாரணம் வழங்கல் போன்ற எதிர்பாராத செலவுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் அவர் அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருந்தாலும், ஆரம்பிக்கப்படாத திட்டங்கள், நிர்மாண பணிகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரச பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் நிறைவடைந்திருந்தாலும், நியமனம் வழங்குவதை இடைநிறுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளின் அனுமதியின் கீழ் ஊழியர்களுக்கு சம்பளத்துக்கு மேலதிகமாக வழங்கப்படும் கொடுப்பனவுகளைத் துண்டிக்கவும், பணியில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை வழங்கவும் நிதி அமைச்சர் பணிப்பரை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக சேமிக்க முடியுமாகும் நிதி தொடர்பான அறிக்கை ஒன்றையும் நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளார்.