சம்பள முரண்பாட்டை தீர்பதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வை அதிபர், ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண்பது தொடர்பாக நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து கூறும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
24 வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் தீர்வு காண நடவடிக்கையெடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதன்படி அதிபர் -ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட உபசெயற்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக 2021 நவம்பர் 20 திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படும் என்றும், அது 2022 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் இணைக்கப்பட்டு கட்டம் கட்டமாக தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பணியாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கு 5000 ரூபா விசேட கொடுப்பனவொன்றை வழங்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.