July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கறுப்புச் சந்தை மருந்து மாபியாவின் ஊடாக நண்பர்களுக்கு சலுகை வழங்குவதை நிறுத்து’: சஜித்

கறுப்புச் சந்தை மருந்து மாபியாவின் ஊடாக நண்பர்களுக்கு சலுகை வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிஆர் மற்றும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அரசாங்கம் ஆகக்கூடிய விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருந்தாலும், குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பின்னணியில் பாரிய மோசடி நிலவுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அன்டிஜன் பரிசோதனையை 600 ரூபாயிற்கும் பிசிஆர் பரிசோதனையை 2000 ரூபாயிற்கும் பெற்றுக்கொள்ள முடியும் என்று சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்டிஜன் பரிசோதனையை 2000 ரூபாயிற்கும் பிசிஆர் பரிசோதனையை 6500 ரூபாயிற்கும் விலை நிர்ணயித்து அரசாங்கம் வர்த்தமானி வெளியிட்டது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரிசோதனைப் பொருட்களை அரச மருந்துப் பொருட்கள் கூட்டுத்தாபனம் ஊடாக கொண்டு வந்து மக்களுக்கு சலுகை வழங்க முடியுமாக உள்ள நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு இலாபமீட்ட வழிவகை செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அன்டிஜன் பரிசோதனையை 600 ரூபாயிற்கும் பிசிஆர் பரிசோதனையை 2000 ரூபாயிற்கும் விலை நிர்ணயம் செய்து, மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார்.