July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சாதனை வீரர் தினேஷ் பிரியன்தவுக்கு பதவி உயர்வு!

2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்ற மற்றும் உலக சாதனையை புரிந்த இலங்கை வீரர் தினேஷ் பிரியன்த ஹேரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சார்ஜன்ட் பதவியில் இருந்த இவர் வாரண்ட் அதிகாரி 1 ஆக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் ஒப்புதலுடன் இராணுவத் தளபதியால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தினேஷ் பிரியன்த ஹேரத் இராணுவத்தின் கஜபா படைப்பிரிவைச் சேர்ந்தவர்.

இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அனுராதபுரத்தின் கெக்கிராவவில் பிறந்த தினேஷ் பிரியன்த  2004 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார்.

2008 மனிதாபிமான நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தினேஷின் இடது கையில் துரதிர்ஷ்டவசமாக காயம் ஏற்பட்டது.

தனது காயத்தை தனது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக மாற்றிய தினேஷ் பிரியன்த, 2012 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தனது வாழ்க்கையை புதிய பாதையில் இட்டுச் சென்றார்.

பிரேசிலின் ரியோவில் 2016 இல் இடம்பெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை  தினேஷ் பிரியன்த  வென்றார்.

ரியோவில் இழந்த தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் சிறந்த பயிற்சியுடனும்  இம்முறை போட்டியில் கலந்து கொண்டார் தினேஷ் பிரியன்த.

பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தினேஸ் பிரியன்த ஹேரத் 67.79 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தார்.

அத்தோடு 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரரின் உலக சாதனையை தினேஷ் முறியடித்துள்ளார்.

இதன் மூலம் பாராலிம்பிக்கில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த  முதல் வீரர் என்ற பெருமையையும் தினேஷ் பெற்றார்.

“நான் இதற்கு முன் பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளேன்.இந்த முறை இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை கொண்டு வருவதே எனது ஒரே இலக்கு” என்று டோக்கியோவுக்கு செல்வதற்கு முன் அவர் கூறினார்.

தாம் சிறுவயது முதல் விளையாட்டில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள அவர், உடல் உபாதைக்கு உள்ளானதன் பின்னரே விளையாட்டில் ஆர்வம் காட்டியதாக தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் சாதிக்க தாம் பல தடைகளை எதிர் கொண்டதாகவும் தினேஷ் பிரியன்த உருக்கமான பதிவென்றில் முன்னர் கூறியுள்ளார்.

இவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.