January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குருநகர் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் சரண்

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் இன்று (30) யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

குருநகர் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் (24) படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவ தினத்தன்று குறித்த இளைஞர் சக நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு குழு அவர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றது.சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்.பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடி பல இடங்களில் தேடுதல் நடத்தினர்.

இதனையடுத்து 9 நாட்களின் பின்னர் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 20 பேர் வரை உடந்தையாக உள்ளனர் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவருக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையில் 2018 ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றது எனவும், அதன் தொடர்ச்சியாக இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.