July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கர்ப்பிணி தாய்மார்கள் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வைத்திய நிபுணர் அறிவுரை!

இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 32 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

நாடு கொவிட் தொற்று பரவலை எதிர் கொண்டது முதல் இதுவரை 4,200 கர்ப்பிணி தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 900 பேர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என்று வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 32 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.

கர்ப்பிணி பெண்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் நாட்டில் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, 75% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்போது வரை கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டார்.

இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத கர்ப்பிணித் தாய்மார்கள் பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்திலோ அல்லது அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்தோ தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

சன நெரிசலான இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணி தாய்மார்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கொவிட் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து விலகி இருக்கும்படியும் அறிவுறுத்தினார்.

அத்தோடு கொவிட் தொற்று உறுதியான தாய்மார்கள் மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் கீழ் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, குடும்பத்தில் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் அவர்களில் இருந்து தம்மை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.