சர்வதேசப் பங்குதாரர்களின் உதவியுடன், ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை பிரஜைகளை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான எதிர்பார்ப்புக்கள் உள்ளடங்கலாக, முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் அவதானித்து வருவதுடன், அங்கு நிலவும் நிலைமைகள் குறித்து அக்கறையுடன் செயற்படுவதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலைமைகள் தொடர்பில் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை ஆப்கானில் இருந்த 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதுடன், 7 பேர் வெளியேற்றப்படவுள்ளதாகவும், 21 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளிலிருந்து பயண அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள அனைவரும் ஆப்கானிஸ்தானிற்கு வெளியே பயணங்களை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான முறையில் அனுமதிக்கப்படும் என இலங்கை எதிர்பார்ப்பதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.