இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் சுயாதீனமாக இயங்க வேண்டும் என்று இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் ஆகியவற்றுடன் உலகம் நெடுகிலும் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு தோழமையுடன் இணைந்து கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளொருவர் வலிந்து காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் குடும்பங்களினதும், சமூகங்களினதும் அன்புக்குரியவர்கள் குறித்த உண்மையைத் தெரிந்துகொள்ளும் உரிமையையும், பொறுப்புக்கூறல், நீதி மற்றும் இழப்பீடு என்பவற்றுக்கான உரிமையையும் இல்லாமல் செய்வதாக ஐநா வதிவிட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அச்சத்துடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் வாழ்ந்து வருவதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான போராட்டத்தின் முன்னணியில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களே இருந்து வருவதாகவும், அவர்கள் அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் பழிவாங்குதல்கள் என்பவற்றை எதிர்கொள்ள முடியும் என்று ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 2016 ஆம் ஆண்டில் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான ஒரு வழிமுறையாகும் என்று அவர் பாராட்டியுள்ளார்.
குறித்த அலுவலகத்தின் வெற்றி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்படுவதில் தங்கியிருப்பதாகவும் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.