July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சாதனை வீரர் தினேஷ் பிரியன்தவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்ற மற்றும் உலக சாதனையை புரிந்து இலங்கை வீரர் தினேஷ் பிரியன்த ஹேரத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் டோக்கியோ நகரில் தற்போது நடைபெற்று வரும் 16 ஆவது பாராலிம்பிக்கில் இலங்கை சார்பில் போட்டியிட்ட தினேஸ் பிரியந்த ஹேரத், ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

வரலாற்றில் முதன் முறையாக இலங்கைக்கு இவ்வாறாக தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
இந்த வெற்றிக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வெற்றியீட்டித் தந்த இராணுவ வீரரான தினேஷ் பிரியன்த ஹேரத்துக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் தாய் நாட்டை கொடூரமான பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றுவதற்கும் இம்முறை சர்வதேச விளையாட்டு வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் இலங்கையின் பெயரை எழுதுவதற்கும் நீங்கள் அளிக்கும் அர்ப்பணிப்புக்கு மீண்டும் மீண்டும் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தங்கப் பதக்கத்தை வென்று நாட்டுக்கு கௌரவத்தை ஏற்படுத்திக்கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு தனது வாழ்த்துகளை கூறிக்கொள்வதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஏற்கவே 2016 ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் நாட்டுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்த இவர் இம்முறை தங்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளமையை வாழ்த்துவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தங்கம் வென்று நீங்கள் இலங்கை தாய் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ வீடியோ மூலம் தினேஸ் பிரியந்தவை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

https://twitter.com/MoYS_SriLanka/status/1432231811048873988?s=20