இலங்கையில் கொவிட் மரணங்களின் வீதம் வாராந்தம் அதிகரித்து செல்கின்ற நிலையில், முந்தைய வாரங்களை விடவும் கடந்த வாரம் நாட்டின் கொவிட் மரணங்கள் 17 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 1217 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த மாதத்தில் கடந்த 27 ஆம் திகதி வரையில் 3649 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கொவிட் வைரஸ் பரவல் மோசமான தாக்கத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், இந்த மாதத்தில் கொவிட் வைரஸ் பரவலின் பாதிப்பு கடந்த மாதங்களை விடவும் மோசமானதாக அமைந்துள்ளதாகவும், கொவிட் மரண வீதம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக இந்த மாதத்தில் நான்கு வாரகாலம் தனித்தனியாக தரவுகளுக்கு அமைய எடுத்து நோக்குகையில் ஒவ்வொரு வாரமும் கொவிட் மரணங்களின் வீதம் அதிகரிப்பை காட்டுவதுடன், கடந்த வாரத்தில் 17 வீதத்தால் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதியில் இருந்து 27 ஆம் திகதி வரையில் 1217 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இதில் 927 மரணங்கள் 60 வயதிற்கு கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் கொவிட் மரணங்களின் 76 சதவீத அதிகரிப்பாகும்.அதேபோல் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 29 ஆயிரத்து 151 கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோல், தற்போது வரையில் (கடந்த 27 ஆம் திகதி அறிக்கை) நாட்டில் 8 ஆயிரத்து 157 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில்,ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து 27 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 ஆயிரத்து 649 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பணியகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.