July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அழுத்தம் பிரயோகிக்கப்படும் போதே எமக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்’; சுமந்திரன் எம்.பி கூறுகின்றார்

அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றோம் என்பதற்காக பொறுப்புக்கூறல் விடயத்தில் அழுத்தம் கொடுக்க பின்வாங்குகின்றோம் என அர்த்தப்படாது. பொறுப்புக்கூறல் விடயத்தில் அழுத்தம் கொடுக்கும் அதே நேரத்தில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க முயற்சிக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு என்பது வேறு,பொறுப்புக்கூறல் விடயங்கள் என்பது வேறு.இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற இன அழிப்பு செயற்பாடுகளுக்கு நிச்சயமாக அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் அவசியம். இனப்படுகொலை சம்பந்தமாக,பொறுப்புக்கூறலை வலியுறுத்துகின்ற நாடுகளும் அழுத்தங்களை வைத்து அரசாங்கத்துடன் பேசுங்கள் என்பதையே கூறுகின்றன.

குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கும் போது அரசாங்கம் சில விடயங்களை செய்து காட்ட முனையும்.அவற்றில் ஒன்றுதான் அரசியல் தீர்வாகும்.அழுத்தங்கள் இருக்கின்ற போதுதான் அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். தீர்வு விடயத்தில் அரசாங்கத்துடன் தான் பேச வேண்டும்.ஆனால் அரசியல் தீர்வை பெற்றுக் கொண்டோம் என்பதற்காக நீதிக்கான அழுத்தம் ஒருபோதும் இல்லாது போகாது.அழுத்தம் இருக்கும் போதே எமக்கான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும்.இல்லையேல் எப்போதுமே எம்மால் தீர்வு குறித்து சிந்திக்க முடியாது.

யுத்த குற்றங்களுக்காக ஒரு இருவருக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக அரசியல் தீர்வு கிடைத்து விடப்போவதில்லை. ஆகவே பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்கள் இருக்கின்ற வேளையில்,அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வது அவசியமானதாகும்.

அதற்கான சகல முயற்சிகளையும் நாம் முன்னெடுக்கின்றோம். அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றோம் என்பதற்காக,நாம் பொறுப்புக் கூறலை கைவிட்டு விட்டோம் என எவரும் நினைத்து விட வேண்டாம். பொறுப்புக் கூறல் விடயத்தில் தொடர்ச்சியாக சர்வதேசத்தின் தலையீட்டுடன் அழுத்தங்களை பிரயோகித்தே வருகின்றோம் என அவர் மேலும் கூறினார்.