July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொது ஒன்றுகூடலை உடனடியாக நிறுத்துங்கள்’; மக்களிடம் அவசர கோரிக்கை

கொழும்பு மாவட்டம் டெல்டா வைரஸ் பரவலில் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.பொது ஒன்றுகூடலை உடனடியாக நிறுத்த வேண்டும்.மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் மக்கள் வீடுகளில் கூட ஒன்றுகூடி உணவுண்பதையோ நிகழ்வுகளை நடத்துவதையோ தற்போது தவிர்ப்பது ஆரோக்கியமானதாக அமையும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் அபாயகர நிலைமை குறித்து நாம் தொடர்ச்சியாக தெளிவுபடுத்தி வருகின்றோம்.டெல்டா வைரஸ் பரவல் காரணமாக முழு நாடுமே பாரிய அச்சுறுத்தல் நிலைமையை சந்தித்து வருகின்றது. குறிப்பாக மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்க வேண்டிய மட்டத்தில் உள்ளது.

கொழும்பில் டெல்டா வைரஸ் வேகமாக பரவிவிட்டது.இது சூப்பர் டெல்டா என்ற மாறுபட்ட தன்மைகளை கொண்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.எனவே பொது ஒன்றுகூடலை உடனடியாக நிறுத்த வேண்டும்.மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் மக்கள் வீடுகளில் கூட ஒன்றுகூடி உணவுண்பதையோ நிகழ்வுகளை நடத்துவதையோ தற்போது தவிர்ப்பது ஆரோக்கியமானதாக அமையும்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் எம்மிடத்தில் உள்ளது.இப்போது நாம் நிலைமை அறியாது செயற்பட்டால் மோசமான கொவிட் மரணங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.இது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் எனவும் அவர் கூறினார்.