ஊரடங்கை நீடித்தாலும் நாட்டில் 12 ஆயிரத்தை தாண்டிய கொவிட் மரணங்கள் பதிவாவதை தவிர்க்க முடியாது.அதனை மேலும் பத்தாயிரத்தால் அதிகரித்துவிட வேண்டாம் என்பதே நாம் முன்வைக்கும் கோரிக்கையாகும் என இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
ஊரடங்கு பிறப்பித்தாலும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் நிலைமைகளை விளங்கிக் கொண்டு சுய கட்டுப்பாட்டுடன் செயற்படுவதாக தெரியவில்லை.அனாவசிய ஒன்றுகூடல், அனாவசிய நடமாட்டங்களை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பை பொறுத்தவரையில் நூறு சதவீதம் டெல்டா வைரஸ் தொற்றுப்பரவல் பரவிவிட்டது.கொழும்பில் அடையாளம் காணப்படும் சகல கொவிட் வைரஸ் தொற்றாளருக்கும் டெல்டா வைரஸ் தொற்றே உள்ளது எனவும் கூறியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்துடன் நாம் இணைந்து மேற்கொள்ளும் ஆய்வுகளின் போது மிக பாரதூரமான அறிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.அதில் கூறப்பட்டுள்ள விடயமானது,தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு அல்லது பயணக்கட்டுப்பாடு ஒருபோதும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் ஒன்றல்ல.
தற்போது கொவிட் மரணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.ஆகவே தற்போதுள்ள ஊரடங்கை எதிர்வரும் அக்டோபர் மாதம் முதலாம் வாரம் வரையில் நடைமுறைப்படுத்தினால் தற்போது ஏற்படும் கொவிட் மரணங்களை10 ஆயிரத்தால் குறைக்க முடியும்.செப்டெம்பர் மாதம் நடுப்பகுதி வரையிலேனும் நடைமுறைப்படுத்தினால் மரணங்களை 7500 இனால் குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.