January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்; வீடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்வு!

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 192 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக 200 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி வந்த நிலையில், இன்று (29) உயிரிழப்பு எண்ணிக்கை 200க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

83 பெண்களும் 109 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

156 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.இதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,775 ஆக பதிவாகியுள்ளது.

நாட்டில் கொவிட் தொற்று காரணமாக இறக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தொற்று நோயியல் பிரிவு வெளியிட்ட தரவுகளின்படி ஆகஸ்ட் 20 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த  வீதம் 77.4% ஆக பதிவாகியுள்ளது.

ஆகஸ்ட் 20 க்குள் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 900 பேர் தமது வீடுகளில் மரணமடைந்துள்ளதாக தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 20 க்கு பின்னர் ஒரே வாரத்தில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 155 நபர்கள் வீட்டில் இறந்துள்ளனர்.

அத்தோடு குறித்த காலப்பகுதியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 427 ஆக பதிவாகியுள்ள அதேவேளை,கடந்த வாரம் மட்டும் 65 பேர் இவ்வாறு இறந்துள்ளனர்.

இதற்கிடையில், தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டுமே எடுத்துக் கொண்ட 722 பேரும் இரண்டு டோஸ்கள பெற்ற 137 பேரும் உயிரிழந்தவர்களிடையே அடங்குவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

தொற்று நோயியல் பிரிவின் அறிக்கை படி, கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு டோஸ்களையும் பெற்று 74 பேர் இறந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4,612 இன்று (29)இனங் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 26,169 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 59,796 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 57,598 ஆகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (ஆகஸ்ட் 28) நிலவரப்படி இலங்கையில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை மொத்தம் 7,042,418 பேருக்கு கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு ஒக்டோபர் நடுப்பகுதியில் 60% மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.